
ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர் இம்ரான் கான் மற்றும் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் நாட்டின் ரகசிய சட்டங்களை மீறியதாக பாகிஸ்தானில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இம்ரான் கான் மற்றும் குரேஷி இருவரும் இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
மார்ச்-2022இல் ஒரு பொது பேரணியின் போது, இம்ரான் கான் ஒரு துண்டு காகிதத்தை காட்டி, அமெரிக்கா தன்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
அவர் அப்போது வைத்திருந்த ஆவணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
தனது எதிரிகளை விமர்சிக்க முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயன்படுத்திய அந்த ரகசிய ஆவணம் காணாமல் போனதை அடுத்து, ரகசிய சட்டங்களை மீறியதாக அவர் மீது தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிஜ்வ்ழ்ந்
அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923ன் கீழ் வழக்குப் பதிவு
அந்த ஆவணம் காணாமல் போனதை அடுத்து, இம்ரான் கான் மீதும் அவரது நெருங்கிய உதவியாளர் ஷா மஹ்மூத் குரேஷி மீதும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திடம் இருந்த இந்த வழக்கு அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் கடைசி விசாரணை அக்டோபர் 17ஆம் தேதி ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் நடந்தபோது, குற்றப்பத்திரிகையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு நீதிபதி அபுவல் ஹசனத் சுல்கர்னைன் ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், அந்த சிறப்பு நீதிமன்றம், இன்று இம்ரான் கான் மற்றும் குரேஷி ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளது.