
'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனரும், தற்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தனது மனைவி புஷ்ரா பீபி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தான் நேரடியாகக் காரணம் என்று புதன்கிழமை குற்றம் சாட்டினார்.
புஷ்ரா பீபி, ஊழல் வழக்கிலும், 71 வயதான இம்ரான் கானுடன் சட்டவிரோதமாக திருமணம் செய்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டு, தற்போது இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ள பானி காலா இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி, இம்ரான் கானின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு நீண்ட இடுகையின்படி, தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் பத்திரிக்கையாளர்களுடனான உரையாடலில் இராணுவத் தலைவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என பதிவிடப்பட்டுள்ளது.
குற்றசாட்டு
ராணுவ தளபதி மீது குற்றசாட்டு வைக்கும் இம்ரான் கான்
"ஜெனரல் அசிம் முனீர் என் மனைவிக்கு வழங்கப்பட்ட தண்டனையில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்," என்று கான் கூறினார்.
"அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறினார்".
"என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால், நான் அசிம் முனீரை விடமாட்டேன், நான் உயிருடன் இருக்கும் வரை விடமாட்டேன். அவரது அரசியல் சட்டத்துக்கு விரோதமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவேன்" என்று மிரட்டல் விடுத்தார் இம்ரான் கான்.
நாட்டில் காட்டின் சட்டம் இருப்பதாகவும், அவற்றை 'காட்டின் ராஜா' செயல்படுத்துவதாகவும் இம்ரான்கான் கூறினார்.
"காட்டின் ராஜா விரும்பினால், நவாஸ் ஷெரீப்பின் அனைத்து வழக்குகளும் மன்னிக்கப்படுகின்றன. அவர் விரும்பினால், ஐந்து நாட்களில் மூன்று வழக்குகளில் நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்," என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.