
அமெரிக்கா பின்வாங்கியதைத் தொடர்ந்து பதிலடி வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிதாக விதிக்கப்பட்ட வர்த்தக வரிகளை ஓரளவு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிரான அதன் திட்டமிடப்பட்ட பதிலடி வரி விதிப்பை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) இந்த முடிவை உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு எதுவாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் நடவடிக்கைகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, எஃகு மற்றும் அலுமினியம் மீதான டிரம்பின் 25 சதவீத வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் தோராயமாக €21 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதிக்கத் தயாராகி வந்தது.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் வரிவிதிப்பு
மக்காச்சோளம், மோட்டார் சைக்கிள்கள், கோழி, பழங்கள் மற்றும் ஆடைகள் போன்ற பொருட்கள் இறக்குமதி தடை பட்டியலில் இருந்தன.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என்று வான் டெர் லேயன் எச்சரித்துள்ளார்.
உலகளாவிய நிதிச் சந்தைகள் அதிகரித்த ஏற்ற இறக்கத்துடன் வரிவிதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்ட பிறகு, டிரம்ப் பின்வாங்கும் நடவடிக்கையை எடுத்தார்.
பொருளாதார வீழ்ச்சி மற்றும் சர்வதேசத் தலைவர்களின் அழுத்தம் குறித்த பரவலான கவலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைநீக்கம் சந்தைகளுக்கு தற்காலிக நிவாரணத்தை அளித்திருந்தாலும், நிச்சயமற்ற தன்மை இன்னும் உள்ளது.
தொடர்ச்சியான நிலையற்ற தன்மை மற்றும் தெளிவற்ற அமெரிக்க வர்த்தகக் கொள்கை ஆகியவை உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து ஆபத்துகளை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.