உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில், கடந்த டிசம்பர் மாதம் எலான் மஸ்க்கை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் லக்சரி ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் வுட்டானின் நிறுவனர் பெர்னார்டு அர்னால்ட். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்ததையடுத்து எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது, அதனைத் தொடர்ந்து அந்த சமயத்தில் எலான் மஸ்க்கை முந்தி முதலிடம் பிடித்தார் அவர். ஆனால், தற்போது பொருளாதார மந்தநிலை தொடர்ந்து வரும் நிலையில், _ஃபேஷன் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 10% வரை சரிவைச் சந்தித்திருக்கின்றன லூயிஸ் வுட்டான் நிறுவனப் பங்குகள். மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தையில் 2.6% சரிவைச் சந்தித்திருக்கின்றன அந்நிறுவனப் பங்குகள்.
மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்:
பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிவைச் சந்தித்ததையடுத்து, பெர்னார்டு அர்னால்ட்டின் சொத்து மதிப்பு குறைந்தது. இதனையடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 66% உயர்வைச் சந்தித்திருக்கின்றன. எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பில் 71% டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்தவை தான். பெர்னார்டு அர்னால்டின் சொத்து மதிப்பு குறைந்த நேரத்தில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்தையடுத்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் எலான் மஸ்க். தற்போது $192.3 பில்லயன் சொத்துமதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், $186.6 பில்லியன் சொத்துமதிப்புடன் பெர்னார்டு அர்னால்ட் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.