ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு
கடந்த வாரம் பல பயங்கரமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்பட்டு மக்களை பீதியடைய செய்திருந்த நிலையில், இன்று மத்திய ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவுள்ள மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. செவ்வாயன்று ஜப்பான் கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், புத்தாண்டு அன்று மத்திய ஜப்பானில் நிலநடுக்கம் பதிவாகிய அதே பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக புத்தாண்டு தினத்தன்று, ஜப்பானின் மேற்கு கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 202 பேர் இறந்தனர் மற்றும் 565 பேர் காயமடைந்தனர்.
இன்று உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை
அந்த பெரும் நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஹொகுரிகு பகுதியில் 23,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்தன. 2016ஆம் ஆண்டில் ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குமாமோட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 276 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு, ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கம் இதுவாகும். கடந்த வாரம் ஏற்பட்ட அந்த மிகப்பெரும் நிலநடுக்கத்தால் முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட நாடு முழுவதும் பல முக்கிய வழித்தடங்கள் செயல்படவில்லை. அதனால், நிவாரணப் பொருட்களை வழங்குவதில் தடை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானில் பதிவாகியுள்ளது. ஆனால், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.