அடுத்த 2 மாதங்களில் துபாயில் 24 காரட் தங்கத்தில் நடைபாதை திறக்கப்படவுள்ளது
செய்தி முன்னோட்டம்
சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாவின் மையப்புள்ளியாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில், உலகின் மிக நீளமான 24 காரட் தூய தங்கத்திலான பிரம்மாண்ட நடைபாதை விரைவில் திறக்கப்படவுள்ளது. துபாய் என்றாலே தங்கம் என்று சொல்லும் அளவிற்கு உலக அளவில் தங்க ஆபரணங்களின் பிரதான கூடாரமாக விளங்கும் இந்நகரில், தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரிச் சலுகைகள் அதிகம் உள்ளதால் பல நாடுகளை விட மிகக் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கிறது. இதனால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளும் முதலீட்டாளர்களும் துபாயை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
தெய்ரா தங்க மாவட்டம்
பிரம்மாண்ட சாதனை முயற்சி
சுற்றுலா மற்றும் நகை வர்த்தகத்தை மேலும் ஒருங்கிணைக்கும் நோக்கில், துபாயின் தெய்ரா பகுதியில் பிரத்யேக 'தங்க விற்பனை மாவட்டம்' இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
தங்கம், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தனது தங்க நகர அந்தஸ்தை சர்வதேச அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையிலும், உலகின் மிக நீளமான 24 காரட் தங்க நடைபாதையை அமைக்கும் பிரம்மாண்ட சாதனைப் பணிகளை இந்தத் தங்க மாவட்டம் தற்போது முன்னெடுத்துள்ளது.
சர்வதேச கவனம்
இரண்டு மாதங்களில் திறப்பு
இந்த சிறப்புமிக்க 24 காரட் தங்க நடைபாதை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது.
சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு, ஒரு பவுன் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகி வருவதால் சாமானிய மக்கள் திருமணத் தேவைக்கே நகை வாங்கத் தயங்கி வரும் சூழல் நிலவுகிறது.
இத்தகைய காலகட்டத்தில், துபாயில் பொது மக்கள் நடந்து செல்லும் நடைபாதையே தூய தங்கத்தில் அமையவிருப்பது உலக நாடுகளைப் பெரும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.