LOADING...
இளைஞர்கள், கலவரத்திற்கான காரணம்: வங்கதேச போராட்டம் vs நேபாள போராட்டம்- ஒரு பார்வை
இளைஞர்கள் தலைமையிலான போராட்டம், அந்நாட்டின் ஆட்சியை ஆட்டம் காண வைத்தது

இளைஞர்கள், கலவரத்திற்கான காரணம்: வங்கதேச போராட்டம் vs நேபாள போராட்டம்- ஒரு பார்வை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2025
05:27 pm

செய்தி முன்னோட்டம்

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நேபாளத்தில் வெடித்த இளைஞர்கள் தலைமையிலான போராட்டம், அந்நாட்டின் ஆட்சியை ஆட்டம் காண வைத்தது. தொடர்ந்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, செவ்வாயன்று (செப். 9, 2025) தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். இந்த எழுச்சி, 2024ஆம் ஆண்டில் பங்களாதேஷில் நிகழ்ந்த இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்களுடன் பல ஒற்றுமைகளை பகிர்கிறது. இரண்டு நாடுகளிலும், இளைஞர்கள், சமூக ஊடகம், சிறிய தூண்டுதல்கள், போலீஸ் அடக்குமுறை மற்றும் ஆட்சி மாற்றம் என்பது பொதுவான புள்ளிகளாக இருக்கின்றன.

#1 ஒற்றுமைகள்

இளைஞர்கள் தலைமையிலான எழுச்சி

இளைஞர்கள் தலைமையிலான எழுச்சி: பங்களாதேஷிலும் நேபாளத்திலும், மாணவர்கள் மற்றும் Gen Z இளைஞர்கள் தான் போராட்டங்களுக்கு முன்னிலை வகித்தனர். நேபாளத்தில் "Hami Nepali" எனும் தன்னார்வ அமைப்பின் கீழ், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். "Nepo babies", "Nepo kids" எனும் சமூக ஊடக பிரசாரம், வன்முறை எதிர்ப்பு இயக்கமாக மாறியது. டாக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 1971 போர் வீரர்களின் சந்ததியினருக்கு சிவில் சேவைகளில் 30% ஒதுக்கீட்டிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டினர். இது அவாமி லீக் விசுவாசிகளுக்கு ஆதரவாகவும், உறவினர்களுக்கு ஆதரவானதாகவும் கருதப்பட்டது.

#2 ஒற்றுமைகள்

சிறிய தூண்டுதல், பெரிய தாக்கம்

நேபாளத்தில் 26 சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கையாகக் கூறப்பட்டாலும், இது வெகுஜன எதிர்ப்பை தூண்டியது. பங்களாதேஷில், 1971 போரில் பங்கேற்றோரின் குடும்பங்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கிய முடிவு, மாணவர்களின் கோபத்தை ஏற்படுத்தியது. இரண்டிலும், அரசால் செய்யப்பட்ட சிறிய கொள்கை முடிவுகள், ஊழல், பாகுபாடு, ஆட்சி மீதான நம்பிக்கையின்மையை பரவலாக வெளிக்கொணர்ந்தன. இது பல மாதங்களாக அரித்துக்கொண்டிருந்த அடக்குமுறைக்கு எதிரான ஒரு தீப்பொறியாக கருதப்படுகிறது.

#3 ஒற்றுமைகள்

போராட்டக்காரர்களின் உயிரிழப்பு

நேபாளத்தில், முதல் நாள் போராட்டத்தின் போது மாணவர்கள் உட்பட 20 பேர் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்தனர். பங்களாதேஷில்,1,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என இடைக்கால அரசாங்கம் தெரிவித்தது.

#4 ஒற்றுமைகள்

அரசு கட்டிடங்கள் மற்றும் அமைச்சர்கள் மீது தாக்குதல்

நேபாளத்தில் பிரதமர் ஒலியின் வீடும், பல அமைச்சர்களின் வீடுகளும் கலகக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. பங்களாதேஷில், ஷேக் ஹசீனாவின் வீடு, பாராளுமன்றம் மற்றும் காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. இரு நாடுகளிலும், போராட்டக்காரர்கள் அரசாங்க அடையாளங்களை அழித்தனர்.

#5 ஒற்றுமைகள்

இராணுவத்தின் தலையீடு, ஆட்சி முடிவுக்கு வருகை

நேபாள ராணுவத் தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டல் நேரடியாக தலையிட்டு, ஒலியின் ராஜினாமாவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பங்களாதேஷிலும், ஜெனரல் வக்கர் உஸ் ஜமான், ஹசீனாவை ராஜினாமை செய்யத் தூண்டினார். இரு நாடுகளிலும், இராணுவம், அரசாங்க வீழ்ச்சி மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முக்கிய சக்தியாக மாறியது.