உலகின் எட்டாவது கண்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
உலகில் மொத்தம் ஏழு கண்டங்கள் உண்டு என்று நாம் புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால், உலகில் எட்டாவது கண்டம் ஒன்று இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அப்படியான எட்டாவது கண்டம் இருந்ததற்கான வாய்ப்புகள் இருந்தது என்பதைக் கண்டறியவே கிட்டத்தட்ட 375 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால், இந்த எட்டாவது கண்டமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படும் நிலப்பரப்பின் 94% பகுதிகள் தற்போது கடலில் மூழ்கியிருக்கின்றன. கடலில் மூழ்கியிருக்கும் இந்த நிலப்பரப்பு கண்டறியப்பட்டிருந்தாலும், இதனைக் கண்டமாக ஏற்றுக் கொள்ள முடியுமா முடியாத என ஆய்வாளர்களுக்கிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு கண்டமாக கருத்தப்படும் நிலப்பரப்பின் பண்புகள் என்ன?
ஒரு நிலப்பரப்பை கண்டமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதன் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், குறைந்த அளவு 1 லட்சம் சதுர கிமீ பரப்பளவையாவது அந்த நிலப்பரப்பு கொண்டிருக்க வேண்டும். அந்த நிலப்பரப்பானது தன்னைச் சுற்றியிருக்கும் கடல் மேலடுக்கைவிட கொஞ்சம் கூடுதல் உயரத்தில் இருக்க வேண்டும். இத்துடன் 'பெருங்கடல் மேலடுக்கி'ன் தடிமனை விட அதிக தடிமன் கொண்ட 'கண்ட மேலடுக்கை'க் கொண்டிருக்க வேண்டும். மேற்கூறிய பண்புகள் பல்வேறு இதர பண்புகளையும் கொண்டிருந்தால் மட்டுமே அது ஒரு கண்டமாகக் கருதப்படுவதற்கான அடிப்படைத் தகுதியையே பெறும்.
எட்டாவது கண்டம் ஒரு கண்டமாகக் கருதப்படுகிறதா?
மேற்கூறிய வகையில், ஒரு கண்டத்திற்கான பண்புகளில் பெரும்பாலான பண்புகளைப் பெற்றிருக்கிறது கடலுக்கடியில் மூழ்கியிருக்கும் இந்த எட்டாவது கண்டம், ஒரு சில பண்புகளைத் தவிர. எனவே, இன்னும் இதனை கண்டமாக ஏற்றுக் கொள்ள முடியுமா, முடியாத என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறதே தவிர, அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிற கண்டங்களின் 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னாள் உருவான பாறைகள் கண்டறியப்பட்ட நிலையில், இந்த எட்டாவது கண்டத்தில் 500 மில்லியன் வருடங்களுக்கு முன்னாள் உருவான பாறைகள் மட்டுமே கண்டறியப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த எட்டாவது கண்டம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை.
எட்டாவது கண்டமாக கருதப்படும் 'ஸீலாந்திய'
எப்படிக் கண்டறியப்பட்டது இந்த எட்டாவது கண்டம்?
1642-ம் ஆண்டு அபெல் டாஸ்மேன் என்ற டச்சு நாட்டைச் சேர்ந்த கப்பலோட்டி ஒருவர் புதிய கண்டம் ஒன்று இருக்கிறது என்றும், அதனைத் தான் கண்டறிவேன் என்றும் கூறி கடலில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அந்தப் பயணத்தின் இறுதியில் நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு ஒன்றில் கால் பதித்திருக்கிறார். ஆனால், அந்த எட்டாவது கண்டத்தை அவர் கண்டறியவே இல்லை. டாஸ்மேனைத் தொடர்ந்து பல்வேறு நபர்கள் இந்த கண்டத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், யாராலும் அந்த கண்டத்தைக் கண்டறிய முடியவில்லை. ஏனெனில், அதன் பெரும்பான்மையன பகுதிகள் கடலில் மூழ்கியிருந்திருக்கின்றன. பல்வேறு கட்ட ஆராய்ச்சி மற்றும் தேடல் முடிவுகளுக்குப் பின்பு, 2017-ல் தான் இப்படி ஒரு கண்டம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதைய முடிவு செய்திருக்கிறார்கள்.
எட்டாவது கண்டத்தைப் பற்றி..
தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு அருகில் நியூசிலாந்து நாட்டைச் சுற்றி கடலுக்கடியில் நீண்டிருக்கிறது எட்டாவது கண்டமாகக் கருதப்படும் நிலப்பரப்பு. 1995-ல் தான் கடலில் மூழ்கியிருக்கும், அந்த நிலப்பரப்பிற்கு 'ஸீலாந்திய' (Zealandia) எனப் பெயர் வைத்து அழைத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டைனோசர்கள் உலாவிய அந்த நிலப்பரப்பு, 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதுகிறார்களா ஆய்வாளர்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர், தற்போதைய தென்னாப்பிரிக்கா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களை மொத்தமாக உள்ளடக்கிய பெருங்கண்டமான காண்டுவானாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது ஸீலாந்தியா. இன்னும், இந்த நிலப்பரப்பு குறித்த தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றன. இது குறித்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள்.