காசா தாக்குதலுக்கு பழிவாங்கவே விமானத்தை மோத முயன்றேன்: ஃபிளைதுபாய் துணை விமானியின் வாக்குமூலம்
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, காசா விவகாரத்திற்கு பழிவாங்கும் நோக்கிலேயே தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். விமானம் தரையிறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாக தலைமை விமானி ஸ்மித் மச்சார் மீது அவசரகாலக் கோடாரியால் தாக்குதல் நடத்தி விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹமாம் முயன்றார். இதனால் விமானம் சில நொடிகளில் சுமார் 17,000 அடி கீழே இறங்கியது. எனினும் விமானி கதவைத் திறந்து எச்சரித்ததால், பயணிகள் மற்றும் பணியில் இல்லாத பிற விமானிகள் இணைந்து அவரை கட்டுப்படுத்தி பெரும் விபத்தைத் தடுத்தனர்.
வாக்குமூலம்
"காசாவிற்காகப் பழிவாங்க நினைத்தேன்"
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் விசாரணையில் உள்ள ஹமாம், "காசா மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கவே இதைச் செய்தேன்".
"ஒரு தியாகியாக உயிரை விட விரும்பினேன்" என்று கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலிய நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, தலைமை விமானியைக் கொன்று விமானத்தின் எஞ்சின்களை அணைத்து, டெல் அவிவ் நகரிலுள்ள ஒரு கட்டடத்தின் மீது மோத அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஜூலை மாதமே இத்தாக்குதலை நடத்த நினைத்ததாகவும், அப்போது தனக்குத் தெரிந்த பணியாளர் ஒருவர் பணியில் இருந்ததால் அந்த முடிவை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகள்
தீவிரவாத பின்னணி குறித்த விசாரணை
தீவிரவாத கருத்துகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் காரணமாக, கடந்த ஆண்டே ஓமன் தேசிய விமான நிறுவனத்திலிருந்து ஹமாம் நீக்கப்பட்டிருந்தார்.
இவர் தீவிரவாதப் பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் குறிப்பிட்டிருந்தார்.
விமானப் பணிப்பெண்களுக்கு இதில் தொடர்பில்லை என அமீரக அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
ஹமாம் இத்தாக்குதலை தனியாக நடத்தினாரா அல்லது பின்னணியில் அமைப்புகள் உள்ளதா என்பது குறித்து அமீரக அதிகாரிகளுடன் இஸ்ரேலின் ஷின் பெட், மொசாட் அமைப்புகள் இணைந்து விசாரிக்கின்றன.
அவரது தொலைபேசி தரவுகள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு நாடுகளுக்கான சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.