
காசாவை விட்டு வெளியேறிய 1 மில்லியன் மக்கள்: தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து வடக்கு காசா பகுதியில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசா பகுதி மீது தரைவழித் தாக்குதல் நடத்த தயாராகி வரும் இஸ்ரேலிய இராணுவம், காசாவின் புறநகர்ப் பகுதியில் போர் வாகனங்களைக் குவித்துள்ளது.
10 நாட்களுக்கு முன், நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் பிணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க முயற்சித்து வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ல்டன்வ்
"ஹமாஸைஅழிக்க போகிறோம்": இஸ்ரேல் பிரதமர்
ஆனால், இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலால் 1 மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன மக்கள் காசா பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலால் 2,670 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 9,600 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், "எங்களை அழிக்கலாம் என்று ஹமாஸ் நினைத்தது. ஆனால் நாங்கள்தான் ஹமாஸைஅழிக்க போகிறோம்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்துள்ளார்.
காசா மீதான எந்தவொரு தரைவழித் தாக்குதலும் "அரசியல் முடிவு" சார்ந்தது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) மற்றும் இஸ்ரேலிய விமானப்படை(IAF) ஆகிய படைகளை சேர்ந்த 400,000 க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரை காசா பகுதிக்கு வெளியே இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.