பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று(ஆகஸ்ட் 13) ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் சீன பொறியாளர்கள் சென்ற கான்வாயை தாக்கினர்.
இந்த தாக்குதலின் போது, துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இதனால், துறைமுக நகரமான குவாடரில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குவாதரில் சீன பொறியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அரசு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று காலை 9:30 மணியளவில் சீன கான்வாயின் மீதான தாக்குதல் தொடங்கியது என்றும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தீவிர துப்பாக்கிச் சண்டை நடந்தது என்றும் பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டவ்ச்ஜ்ன்
இதுவரை எந்த தீவிரவாத குழுவும் இதற்கு பொறுப்பேற்கவில்லை
குவாதர், ஃபக்கீர் காலனி அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.
தற்போது, அந்த நகரம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் கராச்சி பல்கலைக்கழகத்தில் சீனாவால் நிறுவப்பட்ட கன்பூசியஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சென்ற மினிபஸ் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால், மூன்று சீனப் பயிற்சியாளர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்(BLA) அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
ஜூலை 2021இல், வடமேற்கு பாகிஸ்தானில் பொறியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால், 9 சீன தொழிலாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.