முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு
இத்தாலியில் G7 உச்சிமாநாடு நடந்தபோது, அதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொண்டனர். அதன் பிறகு பேசியுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் சில "மிக முக்கியமான விஷயங்களில்" இந்தியாவுடன் ஒத்துழைக்க ஒரு உறுதிப்பாடு இருப்பதாகத் தெரிவித்தார். "அது என்ன முக்கியமான விஷயம் என்பதை நான் சொல்லப்போவதில்லை. ஆனால் இது வரும் காலங்களில், சில மிக முக்கியமான பிரச்சினைகளைச் சமாளிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட போகிறோம் " என்று ட்ரூடோ கூறினார். இத்தாலியில் நடைபெறும் மூன்று நாள் G7 உச்சிமாநாட்டின் இறுதி நாளில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் அவர் இதை கூறியுள்ளார்.
கனடா-இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் சிதைந்தன
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஜஸ்டின் ட்ரூடோவுடன் தான் கைகுலுக்குவது போன்ற புகைப்படத்தை பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். அதில் "ஜி7 உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தேன்" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு முன், புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கடுமையான கவலைகளை மோடி தெரிவித்தார். அதன்பிறகு, கனடா-இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் சிதைந்தன. இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கு பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.