வெள்ளை மாளிகையில் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருள் கோகையின் (போதை பொருள்) என அடையாளம் காணப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவசர நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேற்றினர். வெள்ளை மாளிகையின் வெஸ்ட் விங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் மூடப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்க அதிபருக்கான ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியான 'கேம்ப் டேவிட்டில்' கலந்து கொள்ள வெளியே சென்றிருந்த போது இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த போதை பொருள் அபாயகரமானது அல்ல என்று தீர்மானித்த கொலம்பியா மாவட்ட தீயணைப்புத் துறை, இது குறித்து மேலும் விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, 18வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ அருகே அனைத்து பாதைகளும் மூடப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட பொருள் கூடுதல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொருள் எப்படி வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. "அந்த பொருள் கூடுதல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது வெள்ளை மாளிகைக்குள் எப்படி நுழைந்தது என்பதற்கான காரணம்/விதம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று வெள்ளை மாளிகையின் இரகசிய சேவை தெரிவித்துள்ளது.