அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, அந்நாட்டின் பிரதமர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்திருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க-கனடா குடியுரிமை பெற்ற மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை, அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் கொலை செய்ய முயன்றதாக அந்நாடு குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், அண்மையில் நடந்த நேர்காணலில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து, ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார்.
"அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது"
கனடியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் இடம் பேசிய ட்ரூடோ, " இந்த விவகாரத்தில் அவர்கள்(இந்தியாவை குறிப்பிட்டு) குழப்ப முடியாது என்பதை உணரத் தொடங்கி விட்டனர்" என்ற அவர், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர், "இந்த விவகாரத்தில் முன்பிருந்ததை விட தற்போது வெளிப்படத் தன்மை அதிகரித்துள்ளது" என தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், "கனடாவை தாக்குவதால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என புரிதல் ஏற்பட்டுள்ளது" என கூறினார். முன்னதாக, நியூயார்க்கில் பன்னுனைக் கொல்ல ஒரு கொலையாளியை பணியமர்த்த நிகில் குப்தா என்பவருக்கு, இந்திய அதிகாரிகள் $100,000 வழங்கியதாக அமெரிக்க குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையை இந்தியா தீவிரமாக எடுத்து, அது குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளது.
"இந்தியாவுடன் சண்டை இட விரும்பவில்லை"
மேலும் பேசிய ட்ரூடோ, சீனாவின் ஆதிக்கம் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளதால், கனடா, இந்தியாவுடன் சண்டை இட விரும்பவில்லை என தெரிவித்தார். "இது தொடர்பாக இந்தியாவுடன் இப்போது சண்டையிடும் சூழ்நிலையில் நாங்கள் இருக்க விரும்பவில்லை. வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாங்கள் பேச விரும்புகிறோம். இந்தோ-பசிபிக் திட்டத்தை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம்," என்றார். பினான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு இந்திய பிரதமர் மோடி அளித்த பேட்டியில், இந்தியா சட்டத்திற்கு கட்டுப்படுவதாகவும், ஒரு சில சம்பவங்கள் இந்தியா-அமெரிக்க உறவுகளை சீர்குலைக்காது என்றும் தெரிவித்தார்.