நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா
பல வாரங்களுக்கு முன்பே ஒரு காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். "கடந்த திங்கட்கிழமை நான் கூறிய நம்பகமான குற்றச்சாட்டுகளை கனடா இந்தியாவுடன் முன்பே பகிர்ந்து கொண்டது. நாங்கள் அதை பல வாரங்களுக்கு முன்பே செய்தோம். இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக வேலை செய்ய நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி செய்தால் தான் இந்த மிகத் தீவிரமான போக்கை அலசி ஆராய முடியும்" என்று ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவின் குற்றசாட்டுகளை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
மோசமாகும் இந்திய-கனட உறவுகள்
கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த திங்கள்கிழமை கனடா குற்றம் சாட்டியது. ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனட நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஒட்டாவாவை சேர்ந்த புது டெல்லியின் உளவுத்துறைத் தலைவரை கனடா வெளியேற்றியது. இது நடந்த சில மணிநேரங்களில், பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தோடு, ஒரு முக்கிய கனட தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது.