உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் டொராண்டோ மாநகரில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் சரமாரியாக திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. டொராண்டோ மாநகரில் ஆதரவாளர்களை சந்தித்து வந்த ட்ரூடோவிடம் திடீரென ஒரு நபர் "நான் உன்னுடன் கைகுலுக்க மாட்டேன். நீ இந்த நாட்டை சீரழித்து விட்டாய்" என சில கெட்ட வார்த்தைகளை பிரயோகிக்கிறார். அந்த நபரிடம் ட்ரூடோ "நான் எவ்வாறு இந்த நாட்டை சீரழித்தேன்"? என கேட்கிறார். அந்த நபர் அதற்கு, "இங்கு யாராவது ஒரு வீடு வாங்க முடியுமா"? என வினவுகிறார். அவர் கனடாவில் தற்போது நிலவி வரும் வீடுகளின் விலை ஏற்றத்தை மேற்கோள்காட்டி ட்ரூடோவிடம் இவ்வாறு அவர் கேட்கிறார்.
ட்ரூடோவை சரமாரியாக கேள்வி கேட்ட நபர்
அந்த நபர் ட்ரூடோவின் கான்வாய் குறித்தும் கேள்வி எழுப்பினார். "நீங்கள் மக்களிடம் கார்பன் வரியை வசூலிக்கிறீர்கள், இங்கே உங்களது 9 V8 இன்ஜின்கள் அரை மணி நேரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன." நீங்கள் வெளியேற்றும் கார்பன் அதிகமாகிக் கொண்டேபோகிறது" என அந்த நபர் கேட்கிறார். கனடாவில் பிரதமர் ட்ரூடோ கார்பன் வெளியேற்றத்திற்கு வரி வசூலித்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் அளித்த ட்ரூடோ "காற்று மாசுபடுவதற்கு வரி வசூலித்து, அதை மீண்டும் உங்களிடமே வழங்குகிறோம்" எனக் கூறி அந்த நபரை சமாதானம் செய்ய முயன்றார்.
ரஷ்ய பரப்புரையை நம்ப வேண்டாம்- ட்ரூடோ
அதற்கு உடனே அந்த நபர் "வரி செலுத்துவோரிடம் வரியை வாங்கி, நீங்கள் உக்கிரேனுக்கு வழங்குவீர்கள். நீங்கள் அதை உங்கள் சொந்த நாட்டை துண்டாடும் நபருக்கு வழங்குகிறீர்கள்". என அந்த நபர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்கிரேனுக்கு, கனடா உதவி செய்வது குறித்து கேள்வி எழுப்புகிறார். "நீங்கள் ரஷ்ய அதிபர் புதினின் பேச்சை கவனித்து வருகிறீர்கள். இல்லையா? உங்களுக்கு ரஷ்யாவின் போலி பரப்புரைகள் பற்றி தெரியும்" என பிரதமர் ட்ரூடோ சொல்லிவிட்டு கடந்து சென்றார்.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மை காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு காலிஸ்தான் தலைவரான நிஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சைகளின் தொடக்கப் புள்ளியானது. பிரதமர் ட்ரூடோ பேச்சு உலக அளவில் சர்ச்சையானது. அந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் ட்ரூடோ அரசியல் லாபங்களுக்காக இவ்வாறு பேசி வருவதாக குற்றம் சாட்டினர். கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆப் காமன்ஸ் அவையில் நாஜிகளுக்காக போரிட்ட முன்னாள் ராணுவ வீரரை, உக்கிரேனுக்காக போரிட்டவர் என அடையாளம் காட்டப்பட்டு அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. இச்சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சை ஆனது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கண்டனத்தையும் பெற்றது.