346 பேரைக் கொன்ற 737 MAX விபத்துக்களுக்காக போயிங் மீது வழக்கு தொடரப்படலாம்
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 346 பேரைக் கொன்ற இரண்டு அடுத்தடுத்த விபத்துக்களுக்காக போயிங் மீது வழக்குத் தொடரப்படலாம் என்று அமெரிக்க நீதித்துறை செவ்வாயன்று கூறியது. சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் போயிங் தனது கடமைகளை மீறியதாக, அந்த துறை அதிகாரிகள் டெக்சாஸில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தனர். "அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நாங்கள் மதித்திருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று போயிங் கூறியுள்ளது. மேலும் அது தன்னைத் தற்காத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்த திட்டம்
அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இதுபோன்ற மீறல் விபத்துக்கள் தொடர்பான கூட்டாட்சி சட்டத்தை மீறியதற்காக போயிங் மீது வழக்குத் தொடரப்படலாம். இந்த விவகாரத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதை அரசாங்கம் மதிப்பீடு செய்து வருகிறது. மேலும் ஜூன் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. லயன் ஏர் ஃப்ளைட் 610 மற்றும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 302 ஆகிய விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேற்கூறிய இரண்டு விமானங்களும் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.