பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. எஸ்பிரிட்டோ சாண்டோ மாநிலத்தில் 6 பறவைகளுக்கும், ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் ஒரு பறவைக்கும் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 180 நாட்களுக்கு நாடு முழுவதும் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. H5N1 வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் உலகின் மிகப்பெரிய கோழி இறைச்சி ஏற்றுமதியாளராக உள்ளது. ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட $10 பில்லியன் மதிப்பிலான கோழி இறைச்சிகள் பிரேசிலில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
H5N1 வைரஸ் பரவலை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்: WHO
அக்டோபர் 2021 முதல் பறவை காய்ச்சல் அதிகம் பரவி வந்தாலும், தற்போது ஏற்பட்டிருக்கும் பரவலால் முன்பை விட அதிகமான காட்டுப் பறவைகள் உயிரிழந்துள்ளன. சில பாலூட்டிகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, H5N1 வைரஸ் மேலும் பரவுவதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இது மனிதர்களிடையே பரவக்கூடிய வடிவமாக மாறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பறவைகளுடன் மக்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் விளைவாக இப்படிபட்ட பரவல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.