
தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
தோஷகானா வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்(IHC) இன்று(மே 12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.
அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
அதற்கு அடுத்த நாள், இம்ரான் கான் மீது தோஷகானா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமீர் பரூக் இந்த விசாரணைக்கு தலைமை தாங்கினார்.
details
தோஷகானா வழக்கு என்றால் என்ன?
அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் நேற்று தான் விடுவிக்கப்பட்டார்.
இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இம்ரான் கானை உடனே விடுவிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தோஷகானா வழக்கை நிறுத்தி வைக்குமாறு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
விலையுயர்ந்த கிராஃப் கைக்கடிகாரம் உள்ளிட்ட பரிசுகளை, அரசு டெபாசிட்டரியில் இருந்து இம்ரான் கான் தள்ளுபடி விலையில் வாங்கியதாகவும், அவற்றை லாபத்திற்காக விற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவே தோஷகானா வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
இதற்கிடையில், முன் ஜாமீன் கோரி இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதால், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.