லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்: தீவிர போர் குறித்து அதிபர் பைடன் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக போர் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருகிறது.
இந்த சூழலில் லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது பலரையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் நடவடிக்கை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
எச்சரிக்கை
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
சமீபத்தில் ஏபிசி செய்தி நேர்காணலில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்,"ஒரு முழு வீச்சுப் போருக்கு வாய்ப்புள்ளது. அதேவேளையில் இந்த மோதலைத் தடுக்க ஏதுவான சூழலும் இல்லாமல் இல்லை. ஒருவேளை அது நடந்தால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படும். ஒரு தீர்வுக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இப்போது ஏற்பட்டுள்ள மோதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அபாயகரமானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த 30, 40, 50 ஆண்டுகளாகவே இந்த மோதல் தீர்க்கப்படாமல் இருந்தாலும், இப்போதைய சூழலில் இந்த மோதல் பெரிய சக்திகளையும் போருக்குள் இழுப்பதாக அமையும் எனவும் கணிக்கின்றனர்.
இதனால் மொத்த மத்திய கிழக்குப் பிராந்தியமும் போர் மேகத்தில் சிக்கும் சூழல் உள்ளது.