'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்
காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும், ஆனால் வருக்காலத்தில் பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவதற்கான வழி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாகும் நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாத குழுவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இஸ்ரேல் காசா பகுதியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்து வரும் அமெரிக்கா, இந்த போர் தொடங்கியதற்கு பின் முதல்முறையாக, பாலஸ்தீன மக்களுக்கு சார்பாக கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து பேசி இருக்கும் அதிபர் ஜோ பைடன், காசாவை கைப்பற்ற வேண்டும் என்று இஸ்ரேல் நினைப்பது மிகப்பெரும் தவறு என்று கூறியுள்ளார்.
10 நாட்களாக தொடரும் போர்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக ஹமாஸ் பயங்கரவாத குழுவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காசா பகுதி மீது பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நடத்த போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கி அமெரிக்கா உதவியுள்ளது. 10 நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதலில் காசா பகுதி மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இஸ்ரேலால் ஹமாஸின் ராக்கெட் தாக்குதலை தடுக்க முடியவில்லை. காசாவின் அல்-குத்ஸ் மருத்துவமனைக்கு அருகில் ஐந்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நோயாளிகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரையும் காசா பகுதியை விட்டு வெளியேற்றிவிட்டு அந்த பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சித்து வருகிறது.