உக்ரைன் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்; ஜோ பிடென் நிர்வாகம் நடவடிக்கை
குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றமாக, தற்போதைய ஜோ பிடென் நிர்வாகம் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக தாக்குவதற்கு உக்ரைனைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வந்துள்ளது. இந்த கொள்கை மாற்றம் மூலம், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி, ரஷ்யா எல்லைக்குள் 190 மைல்கள் வரையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஏடிஏசிஎம்எஸ் ராக்கெட்டுகள் போன்ற மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்களை வெகு தொலைவில் உள்ள ரஷ்ய இராணுவ சொத்துக்களை குறிவைக்க உக்ரைனை அனுமதிக்கிறது.
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை
முன்னதாக, ரஷ்யா தனது படைகளை வலுப்படுத்த வட கொரிய தரைப்படைகளை நிலைநிறுத்துவதாக ஐரோப்பிய ஊடங்களில் இருந்து அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு சாதகமாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம், உக்ரைன் அதன் முதல் நீண்ட தூர தாக்குதல்களை வரும் நாட்களில் ரஷ்யாவிற்குள் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான விவரங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன. சில அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதல்களின் மூலோபாய தாக்கத்தை சந்தேகிக்கையில், இந்த முடிவு உக்ரேனின் இராணுவ நிலைக்கு ஒரு சாத்தியமான ஊக்கமாக கருதப்படுகிறது. ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், சாத்தியமான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் நிலையை இது மேம்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா எச்சரிக்கை
இந்த கொள்கை மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது மோதலை குறிப்பிடத்தக்க வகையில் விரிவாக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் நிலைப்பாடு நிச்சயமற்றதாகவே உள்ளது. இருப்பினும், அவர் முன்னர் உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை விமர்சித்து போரை விரைவில் முடிப்பதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.