3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் நேரடித் தொடர்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி காலம் முடிந்த பிறகு, அமெரிக்க அதிபர், ஒரு பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொள்வது இதுவே முதல்முறையாகும். ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புக்கள் வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு காரணிகளால் விரிசல் அடைந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் சாத்தியமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் 24 வது பிரதமராக ஷெரீப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2022 க்குப் பிறகு இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்றார்
அமெரிக்க அதிபர் எழுதிய கடிதம்
பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் ஒருவருக்கு அதிபர் ஜோ பைடன் கடிதம் எழுதி இருப்பது இது முதல்முறையாகும். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவருடன் பேசுவதை நிறுத்திய அதிபர் ஜோ பைடன், 2022 ஏப்ரலில் ஷெரீப் பிரதமராக பதவியேற்றவுடன் அவருடனும் பேசவில்லை. பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாகிஸ்தானை ஆதரிப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அதிபர் பைடன் தனது கடிதத்தில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார். உள்ளூர் மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்காக அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான கூட்டாண்மையின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பொது சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் பகிரப்பட்ட இலக்குகளையும் அமெரிக்க அதிபர் எடுத்துரைத்தார்.