பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் குழு தலைவர்கள், நீதித்துறை புதிய ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தின் காரணமாக டாக்காவில் உள்ள உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டனர். புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசை கலந்தாலோசிக்காமல், தலைமை நீதிபதியால் முழு நீதிமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் இந்த எதிர்ப்பு கிளம்பியது. தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றம் எவ்வாறு செயல்படுவது மற்றும் பிற சிக்கல்கள் குறித்து அவர்கள் முடிவு செய்யவிருந்த கூட்டத்தை போராட்டம் காரணமாக ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் அறிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி சதித்திட்டத்தில் ஈடுபடலாம் என அஞ்சும் போராட்டக்காரர்கள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், எதிர்ப்பாளர்களின் இறுதி எச்சரிக்கையின் பின்னர், தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மாலையில் அதிபர் முகமது ஷஹாபுதீனிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஹசன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார். இதற்கிடையில், சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையிலும், மாணவர்களின் கோரிக்கைகளை மதிக்கும் வகையிலும் தலைமை நீதிபதி தனது முடிவை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் கடந்த ஆண்டு இந்த பதவியில் நியமிக்கப்பட்டதால், இவர் ஷேக் ஹசீனாவின் விசுவாசி என கருதும் போராட்டக்காரர்கள், அவர் புதிதாக அமைந்துள்ள ஆட்சியை கலைக்க சட்டரீதியாக முயற்சிக்கலாம் என அஞ்சுவது குறிப்பிடத்தக்கது.