அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள், இறந்துவிட்டதாக அனுமானிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த உடன், கரையில் இருந்த அதிகாரிகளை எச்சரித்ததற்காக கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார். கப்பல் இப்போது இடிந்து விழுந்த பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜின் இடிபாடுகளில் சிக்கியுள்ளது. இந்த ஸ்காட் கீ பிரிட்ஜ் கிட்டத்தட்ட 3 கிமீ நீளமும், ஒரு பெரிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியும் புதன்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட மீட்பு பணிகள்
ஊடக அறிக்கைகளின்படி, பாலம் இடிந்து விழுந்ததில் எட்டு பேர் படப்ஸ்கோ ஆற்றில் வீசப்பட்டனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றின் வேகமும், வெப்பநிலையும், மீட்பு குழுவினருக்கு சவாலாக இருப்பதால், பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நியூயார்க்கிற்கும், வாஷிங்டனுக்கும் இடையே அமைந்துள்ள இந்த பாலம், பால்டிமோர் நகர நெரிசலை தவிர்க்க விரும்பும் ஓட்டுநர்களுக்கு முக்கியப் பாதையாக செயல்பட்டு வந்தது. கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில்(அமெரிக்க உள்ளூர் நேரம்) டாலி என்று பெயரிடப்பட்ட கொள்கலன் கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தை நோக்கி வேகமாக வந்து இடித்ததில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சரக்கு கப்பலில் 22 இந்திய பணியாளர்கள் இருந்தனர்.
சரியான நேரத்தில் 'மே டே' அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
இந்த விபத்து குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிபர், பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை புனரமைப்பதற்கான முழுச் செலவையும் மத்திய அரசு செலுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று கூறினார். அதிபர் சார்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின்படி,"இந்த அவசரநிலைக்கு நாங்கள் தேவையான அனைத்து கூட்டாட்சி வளங்களையும் அனுப்பப் போகிறோம்...நாங்கள் ஒன்றாக அந்த துறைமுகத்தை மீண்டும் கட்டப் போகிறோம்". "கப்பலில் இருந்த பணியாளர்கள் தங்கள் கப்பலின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மேரிலாண்ட் போக்குவரத்துத் துறையை எச்சரிக்க முடிந்தது, நீங்கள் அனைவரும் அறிந்தது. இதன் விளைவாக, உள்ளூர் அதிகாரிகளால் பாலத்தை போக்குவரத்துக்கு மூட முடிந்தது. இது சந்தேகத்திற்கு இடமின்றி உயிர்களைக் காப்பாற்றியது," என்று அந்த அறிக்கை கூறியது.