உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இனமான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் அழிந்துபோகும் நிலையில் இல்லை என்றாலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதலால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்று யுனெஸ்கோ பாரம்பரியக் குழு எச்சரித்துள்ளது. அடிக்கடி இந்த பவளப்பாறைகள் வெளுத்து போகும் நிகழ்வுகள் ஏற்பட்டதால், இந்த பாறைகளை அழிந்துபோகும் இனங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு(UNESCO), கடந்த நவம்பர் மாதம் கூறியது. ஆனால், தற்போது இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் யுனெஸ்கோ, இந்த பவளப்பாறைகளை காக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது.
பவளப்பாறைகள் இருக்கும் இடங்கள் பாரம்பரிய அந்தஸ்தை இழக்க நேரிடும்
கிரேட் பேரியர் பவளப்பாறைகளை அழிந்துபோகும் இனங்களின் பட்டியலில் இருந்து விலக்கி வைக்க ஆஸ்திரேலியா முயற்சித்து வருகிறது. ஒருவேளை, கிரேட் பேரியர் பவளப்பாறைகள் அழிந்துபோகும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்த பவளப்பாறைகள் இருக்கும் இடங்கள் பாரம்பரிய அந்தஸ்தை இழக்க நேரிடும். அதனால், ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்படும். ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் பெரும் இழப்புகள் நேரிடும். இந்த பளப்பாறைகளால் ஒரு ஆண்டிற்கு 6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள்($4 பில்லியன்) வரை வருமானம் ஆஸ்திரேலியாவிற்கு கிடைக்கிறது. மேலும், 64,000 பேருக்கு இது வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், யுனெஸ்கோவின் இந்த முடிவை கேள்விப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் "காலநிலை மாற்றம், நீர் தரம் மற்றும் நிலையான மீன்பிடித்தல் ஆகியவற்றில் 'குறிப்பிடத்தக்க முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.