
ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.
இதனையடுத்து, அமெரிக்க அதிபர் இல்லாமல் குவாட் உச்சி மாநாடு நடக்காது என்று கூறிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், குவாட் உச்சி மாநாட்டை ரத்து செய்தார்.
எனினும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் இந்த வார இறுதியில் ஹிரோஷிமாவில் நடக்கும் G7 கூட்டத்தில் சந்திக்க உள்ளனர்.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு பணக்கார நாடுகளின் G7 குழுவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இல்லை.
ஆனால், இந்த மாதம் நடைபெற உள்ள G7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
details
பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த வாரம் இங்கு வருவார்: ஆஸ்திரேலிய பிரதமர்
"குவாட் தலைவர்கள் ஜப்பானில் சந்தித்து விவாதத்தை நடத்துவார்கள்" என்று அந்தோணி அல்பானீஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அடுத்த வாரம் சிட்னியில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை தொடரும் என்றும் அவர் கூறினார்.
"நாங்கள் இன்று குவாட் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அது பற்றிய கூடுதல் அறிவிப்புகளை நாங்கள் வெளியிடுவோம். ஆனால் பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த வாரம் இங்கு வருவார்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.
2017இல், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்திய-பசிபிக் கடல் வழிகளை எந்தவித தடங்கலும் இல்லாமல் வைத்திருக்க ஒரு புதிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கு 'குவாட்' குழுவை ஆரம்பித்தனர்.
சீனாவின் ஆக்கிரமிப்புக்குளுக்கு மத்தியில் இந்த குழு ஆரம்பிக்கப்பட்டது.