COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம்
துபாயில் நடைபெற்று வரும் COP28 காலநிலை உச்சி மாநாட்டில், 200 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தடுக்க, புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கத் ஒப்புக் கொண்டுள்ளனர். கடுமையான இரண்டு வார பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு, உலகம் புதைபடிவ எரிபொருளுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளதற்கான சமிக்ஞைகளை காட்டுகிறது. "புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய தெளிவான போக்கை சுற்றி உலகம் ஒன்றிணைவது இதுவே முதல் முறை" என நார்வேயின் வெளியுறவு அமைச்சர் எஸ்பன் பார்த் எய்ட் கூறினார்.
புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை குறைப்பது நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கு உதவும்
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க 100 நாடுகள் வாதிட்டாலும், சவூதி அரேபியா தலைமையில் இயங்கும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு(OPEC) நாடுகள், குறிப்பிட்ட எரிபொருளைத் தவிர்க்காமல் உமிழ்வைக் குறைக்க முடியும் என வாதிட்டனர். இந்த வாதப்பிரதிவாதங்களால், மாநாடு இன்று கூடுதல் நேரத்திற்கு நகர்ந்தது. இருப்பினும், இப்போது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தேசிய கொள்கைகள் மற்றும் முதலீடுகள் மூலம் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு நாடுகள் பொறுப்பேற்கும். முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறிப்பாக எரிசக்தி அமைப்புகளில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, ஒரு நியாயமான முறையில், அறிவியலுக்கு ஏற்ப 2050க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கு உதவும்.