பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்பார் என பிரதமர் ஷெரீப் அறிவிப்பு
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க உள்ளார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார் முட்டாஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தான் (MQM-P) உட்பட ஆளும் கூட்டணியின் அனைத்து கூட்டணி கட்சிகளும், மார்ச் 9ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஜனாதிபதி தேர்தலில், சர்தாரிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஷேபாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்து அளித்த பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் உரையாற்றிய ஷெரீப், பாகிஸ்தான் எதிர்கொள்ளும் நெருக்கடிக்களுக்கு தீர்வு காண அனைவரும் கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்ததாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது.
அதிபர் ஆசிப் அலி சர்தாரி
அடுத்த இரண்டு மூன்று நாட்களில் பாகிஸ்தானின் அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பிரதமர் கூறினார். சர்தாரி, PPP கட்சியின் இணைத் தலைவராக உள்ளார். மேலும் 2008 முதல் 2013 வரை பாகிஸ்தானின் 11வது அதிபராக பணியாற்றினார். ஆசிப் அலி சர்தாரியும் பாகிஸ்தான் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க ஷெபாஸ் ஷெரீப்புக்கு முழு ஆதரவை தருவதாக உறுதியளித்தார். விவசாயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மூலம் நாட்டின் பிரச்சினைகள் கணிசமாகக் குறைக்கப்படலாம் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார் என தி ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது. ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தானை "வளர்ச்சிமிக்கதாக" மாற்றவும், "சீனாவின் சக்தியாக" மாறவும் ஆளும் கூட்டணியை ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார் எனவும் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.