
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அனுட்டின் சார்ன்விரகுல் தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்பு
செய்தி முன்னோட்டம்
தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியான அனுட்டின் சார்ன்விரகுல், நாட்டின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவியேற்பு, முன்னாள் பிரதமர் பேடோங்டார்ன் சினவத்ரா நெறிமுறை மீறல்களுக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. 58 வயதான அனுட்டின், தாய்லாந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதவியேற்கும் மூன்றாவது பிரதமர் ஆவார். இவருக்கு முன் பதவி வகித்த பேடோங்டார்ன், கம்போடிய செனட் தலைவருடன் அரசியல் ரீதியாகத் தொலைபேசியில் பேசியது நெறிமுறை மீறல் என நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சி
எதிர்க்கட்சி ஆதரவுடன் பதவியேற்பு
பேடோங்டார்ன் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுட்டின், கசிந்த தொலைபேசி உரையாடல் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக அவருக்கு, பாங்காக் நகரில் உள்ள அவரது `பூம்ஜைதாய்` கட்சியின் தலைமையகத்தில், மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் அரச ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்கட்சியான மக்கள் கட்சியின் ஆதரவுடன் அனுட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆதரவுக்குப் பதிலாக, நான்கு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகவும், புதிய ஜனநாயக அரசியல் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் பொது வாக்கெடுப்பு நடத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.