அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் மீண்டும் பாதுகாப்புக் குறைபாடு
வெள்ளியன்று (ஆகஸ்ட் 30) அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுனில் டொனால்ட் டிரம்ப் பேரணியில் ஒரு நபர் ஒரு தடையை மீறி மீடியா ரைசர் மீது ஏறியதற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தாடி வைத்த ஒரு நபர் சன்கிளாஸ் அணிந்தபடி செய்தியாளர் பகுதியைச் சுற்றியுள்ள தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்துள்ளார். பின்னர் அவர் நிருபர்கள் மற்றும் கேமரா குழுவினர் நிறுத்தப்பட்டிருந்த ரைசரில் ஏறினார். அந்த நபர் மீடியா பகுதியைச் சுற்றியிருந்த ஒரு சைக்கிள் ரேக் மீது ஏறி, ரைசரின் பின்புறம் ஏறத் தொடங்கினார். போலீஸ் அதிகாரிகள் சேர்வதற்குள் பார்வையாளர்கள் அவரை கீழே இழுக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியாளர்கள் இறுதியில் அவரை ரைசரில் இருந்து அகற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மீண்டும் தொடர்ந்த பேரணி
அந்த நபரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி, பேரணியில் இருந்து வெளியேற்றியபோது, முன்னாள் அதிபர் டிரம்ப், "டிரம்ப் பேரணியை விட வேடிக்கை வேறு ஏதாவது இருக்கிறதா?" எனக் கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, மற்றொரு நபரை கூட்டத்தில் போலீசார் கைவிலங்கிட்டு அரங்கை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். இந்த இரண்டாவது கைது முதல் நபருடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையே தாடி வைத்த நபர், காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தொடர்ந்து பேரணி திட்டமிட்டபடி நடந்தது. முன்னதாக ஜூலை 13 அன்று பட்லரில் ஒரு பேரணியின் போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு முயற்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.