சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா
சீனாவில் தொழில்நுட்பத்துறையில் அமெரிக்க நிறுவனங்களின் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகளைத் தடை செய்யும் வகையிலான செயலாக்க ஆணை ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார் நேற்று (ஆகஸ்ட் 9) அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதனைத் தொடர்ந்து, செமிகண்டக்டர் மற்ரும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், குவாண்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சில பிரிவுகளில், சீனாவிலோ அல்லது சீன நிறுவனங்களிலே அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வது தடை செய்யப்படவிருக்கிறது. தொழில்நுட்பத்துறையின் பிற பிரிவுகளில், சீனாவில் முதலீடுகளை அமெரிக்க அரசிடம் ஒப்புதல் பெறும் வகையிலும் இந்தப் புதிய ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ஆணையானது பொதுமக்களின் கருத்துக்களைப் கேட்பதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது. நீண்ட கால ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவை அமெரிக்கா எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அதிருப்தி தெரிவிக்கும் சீனா:
அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, தங்கள் நாட்டு ராணுவத்தை மேம்படுத்தியும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியும் வரும் சீனா, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்கா. ராணுவம், நுண்ணறிவு, உளவு மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சி பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும். அதனைத் உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம் என காங்கிஸூக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது சீனா. உலகளாவிய பொருளாதாரம், வர்த்தக பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை தடுக்கும் வகையில் எந்த முடிவையும் அமெரிக்கா எடுக்காது என தாங்கள் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறது சீனா.