1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி
கடந்த நிதியாண்டின் நிலவரப்படி பாகிஸ்தானில் வறுமையின் அளவு 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், 125 லட்ச மக்கள் மோசமான பொருளாதார நிலைமைகளால் சிரமப்படுகின்றனர் என்று உலக வங்கி கூறியுள்ளது. பாகிஸ்தானில் பொது தேர்தல் நடக்கவுள்ள நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கை குறிப்புகளை வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலக வங்கியின் தரவுகளின்படி, பாகிஸ்தானில் வறுமையின் அளவு ஒரு வருடத்திற்குள் 34.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 125 லட்சம் பாகிஸ்தானியர்கள் ஒரு நாளைக்கு $3.65(ரூ.303.33) வருமானம் மட்டுமே பெறுகின்றனர். இதனால் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.
பெரிய கொள்கை மாற்றங்கள் தேவைப்படும் கட்டத்தில் பாகிஸ்தான் உள்ளது
சுமார் 1 கோடி பாகிஸ்தானியர்கள் தற்போது வறுமையில் வாடுகிறார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. "பாகிஸ்தானின் பொருளாதார மாதிரி வறுமையைக் குறைக்கவில்லை. மேலும் வாழ்க்கைத் தரம் சக நாடுகளை விட பின்தங்கியுள்ளது" என்று பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் முன்னணி நாட்டு பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் கூறியுள்ளார். இதனையடுத்து, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் மீது வரி விதிக்க பாகிஸ்தான் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வீணான செலவினங்களை பாகிஸ்தான் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் கடுமையான பொருளாதார மற்றும் மனித வளர்ச்சி நெருக்கடிகளில் உள்ளது என்றும், பெரிய கொள்கை மாற்றங்கள் தேவைப்படும் கட்டத்தில் பாகிஸ்தான் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.