கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி
அதிக சுமையை ஏற்றி சென்ற மீன்பிடிக்கப்பல் கிரீஸ் கடற்கரையில் கவிழ்ந்து மூழ்கியதால் 79 புலம்பெயர்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான கப்பல் பேரழிவுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. புதன்கிழமை அதிகாலை எதிர்பாராத இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. 400 பேரில் இருந்து 750 பேர் வரை இந்த கப்பலில் பயணித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 104 பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த கப்பல் லிபியாவில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் இரவும் பகலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது
கப்பலில் இருந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் எகிப்து, சிரியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர். தெற்கு கிரீஸின் கடலோர நகரமான பைலோஸுக்கு தென்மேற்கே சுமார் 80-கிமீ தொலைவில் அமைந்துள்ள சிதைவு தளத்தில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் இரவும் பகலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தப்பிப்பிழைத்தவர்கள் பைலோஸுக்கு அருகிலுள்ள கலாமாடா என்ற கிரேக்க துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் தற்காலிக தங்குமிடமும் வழங்கப்பட்டது. இந்த கப்பல் விபத்து சமீபத்திய ஆண்டுகளில் கிரேக்க கடற்கரையில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஒரு மிகப்பெரும் விபத்து நிகழ்ந்தது. அப்போது புயலின் போது இத்தாலியின் கலாப்ரியன் கடற்கரையில் இருந்த பாறைகளில் படகு மோதியதால் 96-பேர் உயிரிழந்தனர்.