Page Loader
ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

எழுதியவர் Sindhuja SM
Mar 23, 2024
09:23 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 115 பேர் காயமடைந்தனர். முன்பு 40ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 60ஆக உயர்ந்துள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 குழந்தைகள் உட்பட 115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்தார். 18 வயதுக்கு மேல் உள்ள 110 நோயாளிகளில், 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ரஷ்யா 

பற்றி எரிந்த கச்சேரி அரங்கம்

உருமறைப்பு சீருடை அணிந்திருந்த தாக்குதல்காரர்கள் கச்சேரி அரங்கத்திற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டே, வெடிகுண்டுகளையும் தீக்குண்டுகளையும் வீசினர். அந்த அரங்கமே தீப்பிழம்பாகவும் கறுப்பு புகையாகவும் இருப்பதை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. அதன் பிறகு, மூன்று ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பல ஆயிரம் பேர் தங்கக்கூடிய அந்த மாபெரும் கச்சேரி அரங்கில் தண்ணீரைக் கொட்டி, தீயை அணைக்க முயற்சிகள் நடந்தன. தாக்குதலில் இருந்து தப்பிக்க, மண்டபத்தில் உள்ள இருக்கைகளுக்குப் பின்னால் ஏராளமானோர் மறைந்தனர். பலர், அடித்தளத்திற்கும் கூரையின் நுழைவாயில்களுக்கும் சென்றனர். நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.