5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்
தடை செய்யப்பட்ட காசா பகுதியில் இருந்து கடுமையான ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது. பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, இன்று அதிகாலை டஜன் கணக்கான ராக்கெட்டுகளை ஏவியதால் ஒரு பெண் கொல்லப்பட்டார். இதனையடுத்து, போர் நிலையை அறிவித்த இஸ்ரேல் அரசாங்கம், மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. "இஸ்ரேல் எல்லைக்குள் ஏராளமான பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்" என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், ஜெருசலேமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டன. மேலும், காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில், இஸ்ரேலிய எல்லை நகரமான ஸ்டெரோட்டில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வலம் வருவதை காண முடிந்தது.
30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த ராக்கெட் தாக்குதல்
சில வீடியோக்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தங்களையும் தெளிவாக கேட்க முடிந்தது. ஆனால், அந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை உடனடியாக சரிபார்க்க முடியவில்லை. காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் சத்தம் காசாவில் இருந்து டெல் அவிவ் வரையும், வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு வரையும் கேட்டதாக செய்திகள் கூறுகின்றன. தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு கட்டிடத்தில் ராக்கெட் மோதியதால் 70 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்ததாக இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுபோக, 20 வயது இளைஞர் ஒருவரும் ராக்கெட் தாக்குதலால் லேசான காயம் அடைந்துள்ளார்.