லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று, புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில், கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபரும் இறந்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சூதாட்டத்தின் சொர்க்கம் என்று கூறப்படும் லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது. சமீப நாட்களாக அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையில் அதிகரித்து வருகிறது. "புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் மூவர் இறந்துள்ளனர், மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஒரு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று லாஸ் வேகாஸ் பெருநகர காவல் துறை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளது.
2017 ஆண்டிற்கு பிறகு நடந்த துப்பாக்கி வன்முறை
2017 ஆண்டு இதே நகரில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அமைதியாக இருந்த இந்நகரத்தில் தற்போது மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. லாஸ் வேகாஸ் நேரப்படி, நேற்று நண்பகலில் (2000 GMT) காவல் துறையினருக்கு இந்த துப்பாக்கி சூடு பற்றி அறிவிப்பு வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள், அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். அதே நேரத்தில், மற்றொரு குழு, கொலையாளியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக சம்பவ இடத்தில இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்த விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.