அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது
20 வயது இந்திய மாணவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை அமெரிக்காவில் உள்ள மிசோரி போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர், மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்க கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அப்படி அமெரிக்காவுக்கு சென்ற இந்திய மாணவரை, அவரது உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் சேர்ந்து 7 மாதங்களுக்கும் மேலாக சிறைபிடித்து கொடுமை படுத்தி இருக்கின்றனர். சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாணவரை அவர்கள் கழிவறையை பயன்படுத்த கூட அனுமதிக்கவில்லையாம். மேலும், 3 வீடுகளில் வீட்டு வேலை செய்ய அந்த இந்திய மாணவர் வற்புறுத்தப்பட்டிருக்கிறார். அந்த மாணவருக்கு நடந்த இந்த கொடூரம் 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்திருக்கிறது.
எப்படி போலீசாருக்கு இந்த தகவல் தெரிய வந்தது?
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அறிந்து கொண்ட ஒரு நபர்(பெயர் வெளியிடப்படவில்லை) இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார். தகவல் அறிந்து செயின்ட் சார்லஸ் கவுண்டியில் உள்ள கிராமப்புற நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்ற போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வெங்கடேஷ் ஆர் சத்தாரு(35)(இந்திய மாணவரின் உறவினர்), ஸ்ரவன் வர்மா பெனுமெட்சா(23) மற்றும் நிகில் வர்மா பென்மட்சா(27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஆள் கடத்தல், துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மாணவர் எப்படி சிறைபிடிக்கப்பட்டார்?
முதலில், போலீசார் அவர்களது வீட்டுக்கு சென்றதும் அவர்கள் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆனால், அந்த நேரத்தில் அடித்தளத்தில் இருந்து வெளியே ஓடிவந்த பாதிக்கப்பட்ட மாணவர், காவல்துறையினரிடம் தஞ்சம் அடைந்தார். மாணவர் மீட்கப்பட்ட போது, அவரது உடல் பயத்தில் நடுங்கி கொண்டிருந்ததாகவும், அவரது உடலில் காயங்கள் மற்றும் வீக்கங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேஷ் ஆர் சத்தாரு, "இந்தியாவில் அரசியல் பலத்தை கொண்ட ஒரு மிகப்பெரும் பணக்காரர்" என்று பாதிக்கப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே, வெங்கடேஷ் ஆர் சத்தாரு, தனது மாணவர் விசாவிற்கு நிதியுதவி செய்வார் என்று நம்பி அந்த இந்திய மாணவர் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாணவரை கொடுமைப்படுத்தி லைவ்ஸ்ட்ரீமிங் செய்த கொடூரன்
கடந்த மாதம், பாதிக்கப்பட்ட மாணவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்ற சத்தாரு, தனது வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தி இருக்கிறார். அதன் பிறகு, சத்தாருவின் ஐடி கம்பெனியில் உள்ள வேலைகளையும் பாதிக்கப்பட்ட மாணவர் செய்திருக்கிறார். அப்போதிலிருந்து, 7 மாதங்களுக்கும் மேலாக தனது வீட்டின் அடித்தளத்தில் பாதிக்கப்பட்ட மாணவரை அடைத்து வைத்த சத்தாரு, அவ்வப்போது ஸ்ரவன் மற்றும் நிகில் ஆகிய இருவரையும் அழைத்து அந்த மாணவரை அடித்து கொடுமை படுத்த சொல்லி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவர் கதறி அழவில்லை என்றால், இன்னும் பலமாக அடிக்குமாறு கட்டளையிடுவாராம் சத்தாரு. இவைகளெல்லாம் ஒரு லைவ்ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரலையாக வெளியிடப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
மாணவரின் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்த சந்தாரு
மேலும், அந்த மாணவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அடித்தளத்தில் கழிப்பறைகள் எதுவும் இல்லை என்றும், அவருக்கு 7 மாதங்களாக உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாள் முழுவதும் வேலை இருந்ததால், பாதிக்கப்பட்ட மாணவரால் ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மட்டுமே உறங்க முடிந்ததாம். சத்தாரு எப்போதும் தன்னை கண்காணித்து கொண்டே இருந்ததால் இந்தியாவில் இருக்கும் தனது பெற்றோர்களிடம் கூட உண்மையை கூற முடியவில்லை என்று அந்த மாணவர் கூறியுள்ளார். இதற்கிடையில், தனது பாஸ்போர்ட்டையும் அவர்கள் கிழித்து எறிந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சத்தாருவுக்கு மனைவியும் குழந்தைகளும் வேறு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.