
பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை
செய்தி முன்னோட்டம்
பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப், பாகிஸ்தானின் சியால்கோட்டில் வைத்து இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இந்தியாவால் தேடப்படும் ஒரு முக்கியமான பயங்கரவாதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த லத்தீஃப் மீது இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 1994 இல் லத்தீப் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், 2010 இல் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
சணல்
தொடர்ந்து பயங்கரவாதிகளை கொல்லும் "அடையாளம் தெரியாத நபர்கள்"
2016ஆம் ஆண்டில், பஞ்சாபில் உள்ள இந்திய விமானப்படையின் பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக நான்கு பயங்கரவாதிகள் மற்றும் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதி ஷாகித் லத்தீப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய வழக்கில் லத்தீப் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கராச்சியில் "அடையாளம் தெரியாத நபர்களால்" சுட்டுக் கொல்லப்பட்டார். அது நடந்து சில நாட்களே ஆகும் நிலையில், தற்போது பயங்கரவாதி ஷாகித் லத்தீப்பும் "அடையாளம் தெரியாத நபர்களால்" சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.