லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்
லிபியா: கடும் புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, டெர்னா நகரில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தால் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட அப்பிரிக்க நாடான லிபியாவில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவுக்கு மிக அருகே உள்ள மொராக்கோ நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 2,900 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது. டெர்னா நகருக்கு மேலே உள்ள அணைகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, லிபியாவில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால், கிழக்கு லிபியா பகுதியில் இருந்த மக்களும் பொருட்களும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன.
குறைந்தது 5000 பேர் இந்த வெள்ளத்தால் மாயமாகி உள்ளனர்
இதனால், லிபியாவின் மிஸ்மாரி நகரில் 5,000-6,000 பொதுமக்கள் மாயமாகி உள்ளனர். டெர்னாவில் மட்டும் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த இறப்பு எண்ணிக்கை 250ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபியா, அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. 2011 நேட்டோ ஆதரவு எழுச்சிக்கு பின்னர் பல ஆண்டுகளாக அந்நாட்டில் மோதல்கள் நடந்து வருவதால் அங்கு பொது சேவைகள் சிதைந்துள்ளன. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திரிப்போலி அரசாங்கம் கிழக்கு லிபிய பகுதிகளைக் கட்டுப்படுத்தவில்லை. எனவே, அப்பகுதிகளில் சரியாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது இன்னும் சரியாக தெரியவரவில்லை.