Loading...
காவல் சோதனைச் சாவடி மீது வெடிபொருள் வாகனம் மோதி வெடிப்பு! பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் பலி
காவல் சோதனைச் சாவடி மீது வெடிபொருள் வாகனம் மோதி வெடிப்பு

காவல் சோதனைச் சாவடி மீது வெடிபொருள் வாகனம் மோதி வெடிப்பு! பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் பலி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2026
08:28 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள அமன் மேலா காவல் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து சனிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச் சாவடி மீது மோதித் தற்கொலைப்படை தீவிரவாதி வெடிக்க செய்ததில் குறைந்தது 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெஹ்ரீக்-இ-தலிபான்

தாக்குதலுக்குத் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்பு

இந்த தாக்குதலுக்குத் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற அமைப்பு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பாகிஸ்தானில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

குறிப்பாகக் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் உள்ள ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து டிடிபி மற்றும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் துப்பாக்கிச் சூடு

இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, செப்டம்பர் 24 அன்று வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய ரகசியத் தேடுதல் வேட்டையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மசூதியைப் புகலிடமாகப் பயன்படுத்தித் தப்பிக்க முயன்ற தீவிரவாதிகளை ராணுவம் எச்சரிக்கையுடன் சுற்றி வளைத்து அழித்தது.

அந்த நடவடிக்கையில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ADVERTISEMENT