சிஎஸ்கே லெஜெண்டின் சாதனையை சமன் செய்த யுஸ்வேந்திர சாஹல்
ஐபிஎல் 2023 சீசனின் 52 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை சமன் செய்தார். முன்னதாக டுவைன் பிராவோ மொத்தமாக 183 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை கொண்டிருந்த நிலையில், தற்போது சாஹலும் 183 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதற்கிடையே சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்துவரை போராடி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்லில் யுஸ்வேந்திர சாஹல் புள்ளி விபரங்கள்
யுஸ்வேந்திர சாஹல் தற்போது 142 ஐபிஎல் போட்டிகளில் 183 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் விக்கெட் அடிப்படையில் பிராவோவை சமன் செய்ததோடு, பிராவோவை விட 19 போட்டிகள் முன்னதாகவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும் பிராவோவுடன் ஒப்பிடுகையில் 7.65 என்ற சிறந்த எகானமி விகிதத்தையும் சாஹல் வைத்துள்ளார். இதற்கிடையே ஐபிஎல் 2023 சீசனில் 11 போட்டிகளில் 8.08 என்ற எகானமி விகிதத்தில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த சீசனில் தற்போதுவரை இரண்டு முறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் யுஸ்வேந்திர சாஹல் கொண்டுள்ளார்.