யுவராஜ் சிங் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர், எம்எஸ் தோனி அவரது வாழ்க்கையை 'அழித்துவிட்டார்': தந்தை யோக்ராஜ் காட்டம்
பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், இந்திய கிரிக்கெட்டுக்கு தனது மகன் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், யுவராஜ் தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒப்பற்றவராக இருந்தார் எனவும், குறிப்பாக புற்று நோயில் இருந்து மீண்டு, தனது 'இரண்டாவது இன்னிங்ஸ்'-ஐ வெற்றிகரமாக முடித்தார் என்றார். இப்படி முன்னேற்ற பாதையில் சென்ற தனது மகனின் வாழக்கையை, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தான் 'பாழாக்கினார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். MS Dhoni-யால் அவரது மகனின் கிரிக்கெட் பயணம் குறைந்தது நான்கு ஆண்டுகள் குறைக்கப்பட்டது என அவர் வருத்தம் தெரிவித்தார்.
மற்ற கிரிக்கெட் வீரர்களை விமர்சிப்பது யோக்ராஜின் வழக்கம்
யோகராஜ் சிங், கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களை காட்டமாக விமர்சிப்பது புதிதல்ல. M.S.தோனி தனது மகனின் கிரிக்கெட் பயணத்தில் தலையிடாமல் இருந்திருந்தால், அவரால் தேசிய அணிக்கு அதிக பங்களிப்பை வழங்கியிருக்க முடியும் என்று கூறிய யோகராஜ், யுவ்ராஜ் ஒரு நிகரற்ற ஆல்-ரவுண்டர் என்பதை எடுத்துரைத்தார். தோனி மற்றும் யுவராஜ் இந்திய அணியில் ஒன்றாக இருந்த நாட்களில், MSD, தனது மகனுக்கு வாழ்க்கையை கடினமாக்கினார் என்றும் குற்றம் சாட்டினார். "தோனியை நான் மன்னிக்க மாட்டேன். அவர் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர், நான் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆனால் என் மகனுக்கு அவர் செய்தது மன்னிக்க முடியாதது" என்று யோகராஜ் ஸ்விட்ச் யூடியூப் சேனலிடம் கூறினார்.
ஷேவாக், கம்பீரையும் விட்டு வைக்காத யோக்ராஜ்
"இன்னும் நான்கைந்து வருடங்கள் விளையாடியிருக்கக்கூடிய என் மகனின் வாழ்க்கையை அந்த மனிதர் (தோனி) நாசமாக்கி விட்டார். யுவராஜ் போன்ற ஒரு மகனைப் பெற அனைவருக்கும் நான் சவால் விடுகிறேன். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்திர சேவாக் கூட இன்னொரு யுவராஜ் சிங் இருக்க மாட்டார்கள்" என்று கூறினார். "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், விளையாடி நாட்டிற்காக உலகக் கோப்பையை வென்றதற்காக இந்தியா அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார். யுவராஜ் மற்றும் தோனி, இந்தியாவுக்காக 273 போட்டிகளில் ஒன்றாக விளையாடி, அனைத்து வடிவங்களிலும் மறக்கமுடியாத பல பார்ட்னர்ஷிப்களை உருவாக்கினர்.