மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியல்
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் மத்தியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் ஷஃபாலி வர்மா போன்றோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகள் பிரிவில் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் அதிகபட்ச தொகைக்கு அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர பெத் மூனி, சோஃபி எக்லெஸ்டோன் மற்றும் எல்லிஸ் பெர்ரி போன்றவர்களும் மகளிர் ஐபிஎல் ஏலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மிகப்பெரிய தொகையை பெற்றனர்.
அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகள் : முழு விபரம்
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 3.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னரை கைப்பற்ற பல அணிகளும் போட்டியிட்ட நிலையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 3.20 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பெத் மூனியை குஜராத் ஜெயண்ட்ஸ் ரூ. 2.00 கோடி கோடிக்கு வாங்கியுள்ளது. மகளிர் டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான சோஃபி எக்லெஸ்டோன், ரூ.1.80 கோடிக்கு உ.பி.வாரியர்ஸால் வாங்கப்பட்டார். இதேபோல் ஆஸ்திரேலிய அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ரூ.1.70 கோடிக்கும், தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் மரிசானே கப்பை டெல்லி கேப்பிடல்ஸ் ரூ. 1.50 கோடிக்கும் வாங்கியுள்ளன.