World Cup Player of the Torunament : தொடர்நாயகன் விருதுக்கு நான்கு இந்திய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில், இரு அணிகளும் பட்டத்தை வெல்வதற்கு தங்களை தயார் செய்து வருகின்றன. இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்கான தொடர் நாயகன் விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உட்பட ஒன்பது வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், இந்தியா டிவி அந்த பட்டியலை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தொடர்நாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலையும் இதில் பார்க்கலாம்.
விராட் கோலி
தற்போது சிறப்பான பார்மில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்தியாவின் அபாரமான பேட்டிங் வரிசையை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். சேஸிங்கில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், வங்கதேசத்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 103 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 95 ரன்களும் எடுத்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில், அவர் லிஞ்ச்பினாக பணியாற்றினார். இலங்கைக்கு எதிராக அவரது 88 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 101 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 51 ரன்கள், மற்றும் அரையிறுதியி 117 ரன்கள் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க போட்டிகளாகும்.
ரோஹித் ஷர்மா
இந்த உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி தொடக்கத்தை வழங்குவதன் மூலம், இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் ஷர்மா இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த தொடரில் அவர் ஒரே ஒரு சதத்தை மட்டுமே பதிவு செய்த போதிலும், அவரது அதிரடியான இன்னிங்ஸ் சக வீரர்களை பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. ரோஹித் ஷர்மா 10 போட்டிகளில் 55.00 சராசரி மற்றும் 124.15 ஸ்டிரைக்கிங் ரேட்டில் 550 ரன்கள் குவித்துள்ளார். அவரது குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்களில் ஒரு சதம், மூன்று அரைசதங்கள், 62 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்ஸர்கள் அடங்கும்.
முகமது ஷமி
முகமது ஷமி ஆறு போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக உள்ளார். ஆரம்பத்தில் அவர், இந்திய அணியின் வழக்கமான விளையாடும் லெவனில் இடம்பெறாத நிலையில், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியதால், அவருக்கு பதிலாக உள்ளே நுழைந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர், நியூசிலாந்துக்கு எதிராக தரம்ஷாலாவில் ஐந்து விக்கெட்டுகளையும், லக்னோவில் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளையும், மும்பையில் இலங்கைக்கு எதிராக 5விக்கெட்டுகளையும், கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். தொடர்நாயகன் விருதை வெல்லும் போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து ஷமி முன்னணியில் உள்ளார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் முகமது ஷமிக்கு இணையாக முன்னணியில் நிற்கிறார். இந்திய அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 10 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒருமுறை 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், போட்டியில் தொடக்கம் முதல் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் முகமது ஷமி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரில் ஒருவருக்கே தொடர்நாயகன் விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள 4 இந்திய வீரர்களை தவிர, ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ராச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக்கும் தொடர்நாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.