AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 7 வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, இலங்கை கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான பாதும் நிசங்க அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் பேட்டிங் அபாரம்
242 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் டக்கவுட் ஆனது அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இப்ராஹிம் ஜத்ரான் 39 ரன்களில் அவுட்டானாலும், ரஹ்மத் ஷா அரைசதம் கடந்து 62 ரன்கள் எடுத்தார். அவரும் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஹஹ்மதுல்லா ஷாஹிதி 58 ரன்களுடனும், அசமத்துல்லா ஒமர்சாய் 73 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதன்மூலம், 45.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.