மகளிர் டி20 உலகக்கோப்பை: தோற்றாலும் ரூ.3.74 கோடி பரிசுத் தொகை வென்ற இந்தியா; யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை?
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி முதல் டி20 உலகக்கோப்பை பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.
முன்னதாக, நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 2009 மற்றும் 2010 சீசன்களில் அதிகபட்சமாக இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துபாயில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம், நீண்ட கால சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்றுள்ளது.
இதற்கிடையே, ஆடவர் கிரிக்கெட்டில் ஐசிசி போட்டிகளில் பட்டம் வெல்ல முடியாமல் தவிப்பதைப் போல், மகளிர் பிரிவிலும், தென்னாப்பிரிக்காவுக்கு சோகம் மட்டுமே மிஞ்சியது.
பரிசுத் தொகை
போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத் தொகை
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டத்தை வென்றதற்காக நியூசிலாந்துக்கு ரூ.19.67 கோடியும், ஒன்பது போட்டிகளில் விளையாடியதற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.21.40 கோடியும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த தென்னாப்பிரிக்கா, போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்காக ரூ.9.83 கோடி உட்பட மொத்தம் ரூ.11.56 கோடி பெற்றது.
அரையிறுதியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவுக்கு ரூ.7.66 கோடியும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.7.40 கோடியும் கிடைத்துள்ளது.
இதற்கிடையில், அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மொத்தம் ரூ.3.74 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.
முன்னதாக, குழு நிலை ஆட்டத்தில் இந்தியா 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.