ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் பின்தங்கியுள்ளார். விராட் கோலி கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு போட்டியிலும் விளையாடாத நிலையில், ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி எட்டாவது இடத்தில் உள்ளார். இதற்கு காரணம் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஹாரி டெக்டர் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தை கைப்பற்றியது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரி டெக்டர் இரண்டு இடங்கள் முன்னேற காரணம் என்ன?
சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹாரி டெக்டர் 140 ரன்களை விளாசினார். இதன் மூலம் 722 ரேட்டிங் புள்ளிகளுடன் ஹாரி டெக்டர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இது ஐசிசி தரவரிசையில் இதுவரை எந்தவொரு அயர்லாந்து பேட்டரும் எட்டாத உயரமாகும். டெக்டர் இரண்டு இடங்கள் முன்னேறியதால், கோலியை போலவே, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த குயிண்டன் டி காக்கும் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை பேட்டராக ஷுப்மான் கில் 738 ரேட்டிங் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 10வது இடத்தில் உள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்