உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கு ரூ,13.22 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை ரூ. 13.22 கோடி என்று ஐசிசி வெள்ளிக்கிழமை (மே 26) அறிவித்தது. இரண்டாம் இடம் பெறுபவர் ரூ.6.61 கோடியும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 3.71 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.29.75 கோடியாகும். முந்தைய 2019-2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும் இதே பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 7 முதல் 11 வரை ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் போட்டியிடும் நிலையில் தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இதர அணிகளுக்கான பரிசுத் தொகை விபரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை அட்டவணையில் நான்காவது இடத்தில் முடித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ரூ.2.89 கோடியும் இலங்கைக்கு ரூ.1.65 கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும். இதே போல் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, ஏழாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான், எட்டாவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ள வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு தலா ரூ.84 லட்சம் பரிசுத் தொகையாக கிடைக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.13 கோடி வழங்கப்படும் நிலையில், இது ஐபிஎல்லில் வழங்கப்படும் ரூ.20கோடியை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்கும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெல்லும் அணிக்கு நிகரான தொகையை பெறும்.