ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தற்போது காயத்தால் அவதிப்பட்டாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியுடன் அவர் நிச்சயம் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. அணியில் விளையாடுவதற்கு முழுத் தகுதி பெறாவிட்டாலும், அவர் அணியுடன் இந்தியா வருவார் என்று தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் புதன்கிழமை (ஏப்ரல் 26) கூறியுள்ளார். வில்லியம்சன் விளையாடுவதற்கு வாய்ப்பில்லாத சூழலில் அணியின் வழிகாட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் போட்டியின் போது கேட்ச் பிடிக்க முயன்து வலது முழங்காலில் காயம் அடைந்து வெளியேறினார்.
நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் விளக்கம்
காலில் காயமடைந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்துகொண்டு உலக கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான முயற்சியில் தற்போது கேன் வில்லியம்சன் உள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட், பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக அவர் தயாராவாரா என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்றார். அவர் மேலும், "அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்றுவரை, எங்களுக்குத் தெரிந்தவை, அது வெற்றிகரமாக நடந்தது என்பது மட்டும் தான். எனவே அவர் தனது மறுவாழ்வுத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.